யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர்.
இது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி கோர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்ற கட்டளை கிடைத்ததும் அவ்விடத்தில் மேலதிக அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.