“எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். என்னால் முழுமையாக இயலாமல் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான் காண வேண்டும். இந்தியாவின் பிரதமர் எனக்கும் பிள்ளைதான். என்னைத் தாயாக அவர் எண்ணி எனது மகனை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு கண்ணீர்மல்க ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார் 32 வருடங்களாக இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு விசேட தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த சாந்தன் உள்ளிட்டவர்களுக்குக் கடந்த 2022:10: 22 அன்று விடுதலை அறிவித்தது இந்திய உச்ச நீதிமன்றம்.
ஆனாலும், சாந்தன் இன்று வரை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சாந்தன் தன்னைத் தனது சொந்த நாட்டுக்கு – இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது இறுதிக் காலத்தை தனது அம்மாவுடன் கழிக்க விரும்புகின்றேன் என்றும் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதேபோல் சாந்தனின் தாயாரும் தனது மகனைத் தாயகத்துக்கு அனுப்பி வைக்குமாறு உருக்கமான வேண்டுகோளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ளார்.