“சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள்.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (09) பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மார்ச் 19 ஆம் திகதிக்குப் பின்னர், உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் பிரதிநிதி ஒருவர், இந்த நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்ய நியமிக்குமாறு கோரி அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை மாற்றியமைத்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், ஆளுநரின் ஒருங்கிணைப்பாளராக அரச அதிகாரி ஒருவர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அதிகாரங்களையும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுத்த மாகாண ஆணையாளர்கள், உள்ளூராட்சி ஆணையர்கள், மாநகர ஆணையர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் உள்ளனர். இவற்றை நடைமுறைப்படுத்த புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை இல்லை.
முந்தைய சுற்றறிக்கையைப் போலவே, இந்தப் புதிய சுற்றறிக்கையும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும். இதில் பின்வாங்கப்போவதில்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மக்கள் ஆணை மூலம் பதில் கிடைக்கும்.” – என்றார்.