களுத்துறை மாணவி சாவு: சந்தேகநபர்களில் ஒருவருக்குப் பிணை!

editor 2

களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதி எனக் கருதப்படும் நபரை, இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரின் சாரதியாகச் செயற்பட்டவர், சிறுமியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, கடந்த 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த மாதம் 26ஆம் திகதி மீளவும் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, பிரதான சந்தேகநபரின் சாரதியை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், ஏனையவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி கடந்த 15ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article