“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். இதனைப் பொலிஸார் என்னிடம் தெரிவித்துள்ளனர்.”
– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்குக் கஜேந்திரகுமார் எம்.பிக்கு உரிய சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் இன்று ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கஜேந்திரகுமார் எம்.பியின் விவகாரம் பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் எனக்குத் தெரியப்படுத்தினர். கைது நடவடிக்கை பற்றியும் எனக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சபை அமர்வில் பங்கேற்கவுள்ள சிறப்புரிமையைத் தடுக்க முடியாது என நான் சுட்டிக்காட்டினேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொலிஸார், பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் இன்று காலையும் எனக்கு அழைப்பை எடுத்தனர். கஜேந்திரகுமார் எம்.பியை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னரே, அவரை நாடாளுமன்றம் கொண்டு வந்து விடுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதான் பொலிஸாரின் திட்டம்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு ஆகும்.” – என்றார்.