யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் உதவி அருட்தந்தையராகப் பணிபுரியும் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவர், 24 வயது இளம் பெண்ணுடனும், மதுபானப் போத்தல்களுடனும் தனியான வீடொன்றில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்குவதாகக் கூறி வீடொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு தங்கியிருந்த பெண்மணி , ஆசிரியை அல்ல என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்மணி வெளியில் செல்லும் நேரங்களில், குறித்த கத்தோலிக்க மதகுரு அந்த வீட்டுக்கு வருவதையும், அவர் வரும் சமயங்களில் பல இளம் பெண்கள் அங்கு வந்து செல்வதையும் அயலிலுள்ள மக்கள் அவதானித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியமும் இளம் பெண் ஒருவருடன் கத்தோலிக்க மதகுரு அங்கு வந்துள்ள நிலையில், சந்தேகமடைந்த அயலவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டினுள் மக்கள் சென்று பார்த்தபோது அங்கு சற்றுமுன் திறக்கப்பட்ட நிலையில், மதுபானப் போத்தல்கள் காணப்பட்டுள்ளன. அதனுடன் கத்தோலிக்க மதகுருவின் வெள்ளை மேலங்கியும் அங்குள்ள கதிரை ஒன்றில் காணப்பட்டுள்ளது.
அருட்தந்தையையும் அங்கு தங்கி நின்ற மன்னாரைச் சேர்ந்த 24 வயதான பெண்ணையும் பிடித்த பொதுமக்கள், தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
வாக்குமூலம் பெற்ற பின்னர் எச்சரிக்கையுடன் பிடிபட்ட இருவரும் விடுவிக்கப்பட்டனர் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.