பரபரப்பான இறுதிப் பந்துவீச்சில் குஜராத் அணியை வீழ்த்தி 16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித் தலைவர் மஹேந்திரசிங் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களையும், ரித்திமான் சஹா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தமிழகத்தைதச் சேர்நத தமிழரான சாய் சுதர்ஷன் 47 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். (ஐபிஎல் ஏலத்தில் தொடக்கத் தொகையான 20 இலட்சம் ரூபாவிற்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.
பந்துவீச்சில் சென்னை அணியின் மத்தீஷ பத்திரண இரு விக்கெட்டுக்களையும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும், ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 04 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 215 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஆரம்பித்தது.
போட்டியின் முதல் 3 பந்துகள் வீசப்பட்டிருந்த போது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இதன்போது சென்னை அணி 4 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனையடுத்து, மழை நின்றதும் மீண்டும் போட்டி ஆரம்பமானது.
மீண்டும் போட்டி ஆரம்பமாகும் போது, டக்வத் லூயிஸ் முறைமைக்கு அமைய போட்டி 15 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி, சென்னை அணிக்கு 171 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நடுவர்களினால் நியமிக்கப்பட்டது.
பின்னர் 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடி சென்னை அணி 15 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக டெவோன் கொன்வே 47 ஓட்டங்களையும், சிவம் துபே 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் குஜராத் அணியின் நூர் ஹகமட் 02 விக்கெட்டுக்களையும், மோஹிட் சர்மா 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 05 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கிண்ணம் வென்றுள்ளது