உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் 4 நிமிடங்கள் மற்றும் 16 செக்கன்களுக்குள் கூறி புதிய உலக சாதனை படைத்தார் 5 வயதான மலையகச் சிறுவன்.
நுவரெலியா மாவட்டத்தின் லோவர் ஸ்லிப் டிவிசன், பெட்ரோ தோட்டத்தில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகையின் மகன் 5 வயதான ஹர்சித் என்ற சிறுவனே இந்த உலக சாதனை படைத்தார்.
இவர் நுவரெலியா புனித ஹோலி ட்ரைனிட்டி கொலீச் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று வருகின்றார்.
இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களூடாகக் கேள்விப்பட்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர் இந்தச் சிறுவனின் முயற்சியை முறைப்படி பரிசோதித்து உலக சாதனையாக அங்கீகாரம் செய்தது.
இதற்கான நிகழ்வு நேற்றுமுன்தினம் நுவரெலியா புனித ஹோலி ட்ரைனிட்டி கொலீச் பாடசாலையில் நடைபெற்றது.
புதிய சோழன் உலக சாதனை படைத்த இந்தச் சிறுவனை நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் பொதுத் தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கத்துரை, 24 நாடுகளின் கிளைகளின் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் போன்றோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்.