தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
சந்திப்பு தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சமூக ஊடகங்களில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நான் உட்பட அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து, நலம் விசாரித்தோம்.
இதன்போது மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஐயா காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து நினைவூட்டினார்.
இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.” – என்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் மனைவியும் கலந்துகொண்டார்.