“மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பெற படாதபாடு படுகின்றார். இது வெட்கக்கேடு.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் அதிகாரம் இல்லாத ஒரு குழு இப்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள அந்த அதிகாரத்தைப் பிரித்து எடுப்பதில் அந்தக் கட்சிக்குள் போட்டி நிலவுகின்றது.
மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியே ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை இல்லை.
மொட்டுத் தலைவரான மஹிந்தவை ஒரு பக்கத்தில் போட்டுவிட்டு மொட்டுக் கட்சியில் சிலர் இப்போது ரணிலுடன் இணைந்து வேலை செய்கின்றனர். அது அதிகாரத்தைப் பகிர்ந்து எடுப்பதற்காகவே.
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களும் ரணிலுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் பதவிக்காகவே.
இப்போது மஹிந்த பிரதமராகப் போகின்றார் என்று கதை அடிபடுகின்றது. அது நடக்காது என்று சொல்ல முடியாது. இவர்கள் எல்லோரும் அடிபடுவது மக்களுக்காக அல்ல. மக்களுக்குச் சேவை செய்வதற்காக அல்ல. பதவிக்காக மட்டும்தான். மஹிந்தவும் மீண்டும் பிரதமர் பதவியைப் பெறவே படாதபாடு படுகின்றார். இது வெட்கக்கேடு.” – என்றார்.