வருட இறுதிக்குள் நாடு வீழ்ச்சியடையும் என்கிறது ஐ.தே.க!

வருட இறுதிக்குள் நாடு வீழ்ச்சியடையும் என்கிறது ஐ.தே.க!

editor 2

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. இந்நிலை தொடர்ந்தால் வருட இறுதிக்குள் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

காலியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தாெடர்ந்து குறிப்பிடுகையில்,

இடம்பெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும்போது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை குறைவடைந்துள்ளதை தெளிவாக காட்டுகிறது. மக்கள் செல்வாக்கை இழந்து வருகின்றதை தற்போது அரசாங்கமும் உணர்ந்துள்ளது.தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் அனைவரையும் திருடர்கள் என்றே தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வந்தது. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரசாரம் செய்துவந்தார்கள்.

ஆனால் தேர்தலில் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியை மக்கள் வழங்கவில்லை. 180க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஒன்று குறுகிய காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்தளவு பின்னடைவை சந்தித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அதனால் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

கலந்துரையாடல்கள் சாதகமாகவே அமைந்துள்ளன. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு 4ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர்.அதனால் அதிகமான சபைகளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துச்சென்ற வழியை தவிர வேறு வழியில்லை. இந்த வழிக்கு மாற்றமாக பயணித்தால் நாடு வீழ்ச்சியடையும் என்றே தெரிவித்திருந்தோம்.

தற்போது அரசாங்கம் செல்லும் பயணத்தை பார்க்கும்போது இந்த வருட இறுதிக்குள் நாடு வீழ்ச்சியடையும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Share This Article