சர்வதேச ஒப்பந்தங்களுடன் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமை ஏற்படும் – ரணில்!

சர்வதேச ஒப்பந்தங்களுடன் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமை ஏற்படும் - ரணில்!

editor 2

வெளிநாடுகளுக்கு சென்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிராக பேசியதோ செயல்பட்டதோ கிடையாது. இதனை மக்கள் அறிவர். சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் அரசியல் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமையே ஏற்படும். மின் கட்டண அதிகரிப்பு நாணய நிதிய நிபந்தனைகளில் முக்கியமான தொன்றாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நான்காவது தவணை கொடுப்பணவை விடுவிக்க போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது.

மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு நாணய நிதியத்தின் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தனது அரசியல் போலித்தனத்தால் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு இதுவொரு நெருக்கடியான நிலைமை தான். நடைமுறையில் உள்ள மின்சார கட்டணம் மின்சார உற்பத்தி செலவை ஈடு செய்ய வில்லை என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

ஆகவே கட்டண அதிகரிப்பு நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இவான் பாபஜோர்ஜியோ வலியுறுத்தியுள்ளார். எனவே சர்வதேச நாணய நிதியத்தின் பிரச்சினையை எம்மீது சுமத்துவது முறையல்ல. மாறாக தீர்வுகளை காண முயற்சிக்க வேண்டும்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு சென்று நாட்டிற்கு எதிராக பேசியதில்லை. அதனை அனைவரும் அறிவர். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வாஷிங்டனுக்கு சென்றிருந்தார். அங்கு தான் மின்சார கட்டண விவகாரம் பேசப்பட்டுள்ளது.

எனவே சர்வதேச விடயங்களுடன் இவ்வாறு அரசாங்கம் விளையாட இயலாது. நாடு நெருக்கடிக்குள் செல்லுமாயின் தலையீடுகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

Share This Article