பிள்ளையான் வாக்குமூலம்; பல்வேறு இரகசியங்கள் வெளியாகின!

பிள்ளையான் வாக்குமூலம்; பல்வேறு இரகசியங்கள் வெளியாகின!

Editor 1

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் பல்வேறு இரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், பிள்ளையானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் அவருக்கும் தொடர்பு இருப்பது ஓரளவு தெரியவந்துள்ளது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்கு, கடந்த அரசாங்கங்களின் காலத்தில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பிள்ளையானை பார்வையிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, பிள்ளையானின் சட்டத்தரணி என்று கூறி கம்மன்பில பிள்ளையானைச் சந்தித்துள்ளார். ரணிலும் ஒரு சட்டத்தரணி தான் என்றாலும், அவர் அவ்வாறு முயற்சிக்கவில்லை. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பினும், விசாரணைகளில் அவரிடம் இருந்து பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பிருக்கின்றமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன – என்றார்.

Share This Article