தெரிவு செய்யப்பட்ட சமூக வலைத்தள ஊடகவியலாளர்களுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பான விபரங்களை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் பணத்திற்கு விற்பனை செய்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடயம் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் பொலிஸாரின் ஒழுக்கம் அதிருப்திக்குரியன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சட்டத்தரணியாகவே பிள்ளையானை சந்தித்தேன். அரசியல்வாதியாக சந்திக்கவில்லை. இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிலைய பொறுப்பதிகாரி என்னிடம் வலியுறுத்தினார்.
இந்த அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குள் இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் அந்த செய்தி வெளியாகியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக சேவையாற்றும் ஏ.எல்.எம்.பாயிம் தனது முகப்புத்தகத்தில் நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றதையும், அதுதொடர்பில் அவரது நிலைப்பாட்டையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
தடுப்பு காவலில் உள்ள சந்தேக நபரை சந்திக்க வரும் சட்டத்தரணிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முகப்புத்தகத்தில் பதிவிடுவதில்லை. இதுவே முதல்தடவையாகும்.
தெரிவு செய்யப்பட்ட சமூக வலைத்தள ஊடகவியலாளர்களுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பான விபரங்களை பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் காசுக்கு விற்பனை செய்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடயம் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தடுப்புக் காவலில் உள்ள பிள்ளையான் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையை குறிப்பிட வேண்டிய நோக்கம் இருக்குமாயின் பொலிஸ் ஊடக பேச்சாளர் சகல ஊடகங்களுக்கும் செய்தியை குறிப்பிட வேண்டும். அதனைவிடுத்து தெரிவு செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரம் செய்திகளை விற்பனை செய்ய கூடாது. பொலிஸ் சேவையின் ஒழுக்கம் அதிருப்திக்குரியது என்றார்.