தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குத் தயார் – ஜோசப் ஸ்டாலின்!

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குத் தயார் - ஜோசப் ஸ்டாலின்!

editor 2

சம்பள முரண்பாடு தொடர்பில் அதிபர் ஆசிரியர் சங்கம் மாத்திரமல்ல ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இதுவரை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. வரவு – செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரும் அவர் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.

ஆகையால் ஒட்டுமொத்த ஆசிரியர் துறையும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளது. கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்த போதும் எமது சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்குமாறு நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

எனினும் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கமும் எமது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாம் அதற்கு எதிராக எவ்வித கருத்துகளையும் முன்வைக்கப் போவதில்லை. எனினும் அதிபர் ஆசிரியர் குறித்து கவனத்தில் கொண்டிருக்கலாம் என்பதே எமது கோரிக்கை.

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, அடிப்படை சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் எமது சங்கம் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.

அவை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது வரவு – செலவு திட்டத்துக்கு பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளனர். எமது சங்கத்தில் இருந்த ஆசிரியர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர். எனினும் அவர்கள் இது குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதிபர் ஆசிரியர் சங்கம் மாத்திரம் அல்ல ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

Share This Article