நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு செல்கின்றார்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ உள்ளிட்டவர்களை சந்தித்து பரஸ்பர கலந்துரையாடல்களில் அமைச்சர் விஜித ஹேரத் ஈடுப்பட உள்ளதுடன் அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடனான சந்திப்பு உறுதிப்படுத்தப்பட வில்லை என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு குழு அமெரிக்க செல்கின்றது.
அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வெளிவிவகார விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க விஜயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
முதலீடுகள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் வலுவாக உள்ளதாக இந்த சந்திப்பு தொடர்பில் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் உரையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டணக் கொள்கைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா நீண்ட காலமாக பல நாடுகளிடமிருந்து அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதனடிப்படையில் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் கனடா, மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தனது நிர்வாகம் பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழலில் கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. ஆடைத் ஏற்றுமதி துறையின் 70 வீதத்திற்கும் அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பரஸ்பர வரி கட்டணங்கள் குறித்த ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொருளாதார நிலைமை நிலையற்றதாக இருப்பதால், ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கையால் தாங்க முடியாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதன் பிரகாரமே நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் வணிக சமூகத்தின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜித ஹேராத் அமெரிக்காவுக்கு செல்கின்றார்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்க வர்த்தக அலுவலக அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்குள் செயல்படும் இலங்கைக்கு, அதிகரித்த கட்டணங்களைத் தாங்க முடியாததால், அமெரிக்காவின் வரிச்சலுகை கிடைக்கும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.