தற்போதைய அரசாங்கம் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதியின் அதே தொங்கு பாலத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பாதீட்டு விவாதத்தின் இறுதிநாளில் ஆற்றிய உரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவெடுக்கும் முறைமை தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், நாங்கள் முடிவுகளை எடுக்க அச்சமடைவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போதைய அரசாங்கம் போன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறாமல், மக்கள் சார்பான முடிவுகளையே ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் எடுக்கும்.
மக்களைத் தவறாக வழிநடத்தும் ஏமாற்று வேலைத்திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை மாற்றுவோம் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு வேறு விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்றது.
மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றி, வழங்கிய வாக்குறுதிகளுக்குப் புறம்பாக வேறு கொள்கைகளை முன்னெடுப்பது வெட்கக்கேடான செயலாகும்.
எனவே, தற்போதைய அரசாங்கம் தமது வாக்குறுதிகளை புறந்தள்ளி, முன்னாள் ஜனாதிபதியின் கொள்கைகளையே பின்பற்றி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.