முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 9 வாகனங்களை பயன்படுத்தியுள்ளதுடன் இந்த வாகனங்களுக்கு எரிபொருளுக்காக 33 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் போதும் கடந்த அரசாங்கம் செலவுகளை குறைத்துக் கொள்ளவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சபைக்கு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை முன்னாள் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்துள்ளனர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவர் 9 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். அந்த 9 மாத காலத்தில் மட்டும் எரிபொருளுக்காக 3.34 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.
முன்னாள் பிரதி சபாநாயகர் 6 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். 9 மாதங்களுக்கு 135 இலட்சம் ரூபா செலவிடப்பட்டள்ளது. முன்னாள் பிரதிக் குழுக்களின் தலைவர் 4 வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதற்காக 72 இலட்சம் ரூபாயை எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் ஆளும் தரப்பின் பிரதம கொறடா, சபை முதல்வர் அலுவலகம் ஆகியவற்றின் செலவுகளை இயலுமான வகையில் குறைத்துள்ளோம். அரச செலவுகளை குறைக்கும் செயற்பாடுகளை அரசாங்கத்துக்குள் இருந்தே முன்னெடுத்துள்ளோம் என்றார்.