ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று வரை பதிவாகியுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை. எஞ்சிய 6 சம்பவங்கள் காணி தகராறு போன்றவற்றால் இடம்பெற்றவையாகும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 49 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது பயன்படுத்தப்பட்ட டி – 56 ரக துப்பாக்கி, இரு பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர சமூகத்தில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த டி – 56 ரக துப்பாக்கிகள் நான்கும் பிஸ்டல்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களும், இரு கார்கள், 2 வேன்கள், 2 முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.