வடக்கு மக்களுக்கு நாங்களே நிரந்தரமானவர்கள். ஏனைய நாடுகளைப் போன்று தங்களுடைய மக்களின் நலனுக்காகவோ அல்லது பொருளாதார ஒத்துழைப்புக்காகவோ நாங்கள் தூதரகத்தை ஆரம்பிக்கவில்லை. முழுமையாக உங்களுக்காகவே (வடக்கு மக்கள்) யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை 2010இல் ஆரம்பித்தோம் – இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு மதிய உணவு வழங்கி உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு இராஜதந்திர உறவுகளை முன்னெடுக்கும் ஒரேயொரு நிறுவனம் இந்திய துணைத் தூதரகமே. இங்கு 2010ஆம் ஆண்டு தூதரகத்தை ஆரம்பித்தோம். பொதுவாக, மற்றைய நாடுகள் கொழும்பிலேயே தமது தூதரகங்களை அமைத்துள்ளன.
தூதரகங்களின் பொதுவான சேவைகள் தங்களின் நாட்டு மக்களுக்கான நலன்களை பார்ப்பது அல்லது பொருளாதார ரீதியான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதே முக்கிய கடமையாக இருக்கும். ஆனால், இங்கு தூதரகத்தை நாம் ஆரம்பித்தது வடக்கு மக்களுக்காகவே – இங்குள்ள மக்களுக்கு சேவையாற்றவே.
இந்தியாவால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது. இதில், 47ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆயிரம் கொடுக்கப்படவுள்ளன.
தவிர, இந்தியாவிலிருந்து பிரதமர் இங்கு வரும்போதே அல்லது இலங்கையிலிருந்து ஜனாதிபதி ஒருவர் அங்கு செல்லும்போதோ அல்லது உயர்மட்ட சந்திப்புகளின் முடிவில் ஊடக வெளியீடுகளை பார்த்தால் அதில் இருக்கும் விடயங்கள் 75 – 80 வீதமானவை வடக்கு தொடர்பானவை. அடுத்து, கிழக்கு மாகாணம் தொடர்பானவை. மூன்றாவது இடத்திலேயே மத்திய அரசாங்கம் தொடர்பாக இருக்கும். மற்ற நாடுகளுக்கான இராஜந்திர உறவுகளுக்கும் எமது நாட்டுக்குமான இராஜதந்திர உறவுகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
மற்றவர்கள் இங்கு வந்து விட்டு திரும்பிவிடுவார்கள். நாம் மட்டுமே நிரந்தரமாக உங்களுடேனேயே இருக்கிறோம்.
வடக்கில் நாம் செயல்படுத்தும் சகல திட்டங்களையும் நாம் மானியமாகவே வழங்குகிறோம் – என்றும் கூறினார்.