நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இந்த நிலை ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்குள் சிறார்களைத் தனிமையில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியாற்றுபவர்கள் இயன்றளவு நீரைப் பருக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவெளியில் கடுமையான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வெள்ளை அல்லது இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.