சர்வதேச நாணய நிதியத்துடனான (ஐ. எம்.எவ்.) ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துதல் என்ற விடயத்தை மாற்றியமைக்க அரசாங்கம் அந்த நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் மயப்படுத்தும் திட்டத்துக்கு பதிலாக அந்த அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க நடவடிக்கைகளை எடுப்பதாக
அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐ. எம். எவ். இதற்கு சாதகமான பதிலை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனினும், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒப்பந்தத்தின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பு பேச்சுகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வரவு – செலவு திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த வரவு – செலவு திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 33 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்.
எவ்வாறாயினும் இந்த நிதியுதவியை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் வரும் நாட்களில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.