அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டையில் நேற்று சனிக்கிழமை கிளீன் சிறிலங்கா நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து
வெளியிட்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை மற்றும் சிங்கள,
தமிழ் புத்தாண்டுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்தல் தொடர்பான பணிகள் இடம் பெறும். கடந்த பொதுத் தேர்தலைக்காட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி வென்றால் நாட்டுக்கு ஆபத்து, எதிர்த்தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவார்கள் என மக்களை எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியதால் பொதுத் தேர்தலில் வாக்குகள் குறைந்திருந்தன.
ஆனால், அவர்களது கருத்துகள் பொய்யானவை என தற்போது மக்கள் உணர்ந்துள்ளதால் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குகள் மேலும் அதிகரிக்கும். அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் உன்னிப்பாக அவதானிக்கப்படும். அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம்தான் அவர்கள் எதிர்காலத்தில் செயல்பட முடியும். புதிய அரச சார்ப்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கையில் செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றால், அரசாங்கத்தின் வரையறைகளுக்கு உட்படவேண்டும். யு.எஸ். எய்ட் நிறுவனம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உள்ளன.
அந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சி உட்பட பல்வேறு திட்டங்களுக்காக நிதியை வழங்கியுள்ளது. அதேபோன்று அரசியல் மாற்றம் உட்பட பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காகவும் குறித்த நிறுவனம் நிதியை வழங்கியிருக்கலாம். இந்த நிறுவனத்திடமிருந்தது நிதியை பெற்று கடந்த காலத்தில் எவ்வாறு செலவழித்துள்ளனர் என விசாரணைகள் முன்னெடுக்கப்படும்-என்றார்.