இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடன் உதவியை இந்த ஆண்டு நாட்டுக்கு வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர், எதிர்வரும் பாதீட்டில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான 28 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும், உலக வங்கியுடனும் அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
அதன்போது, இலங்கைக்குப் பெருந்தொகையான நிதியை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியுள்ளது.
அதேநேரம், 250க்கும் குறைந்த எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதணி கொள்வனவுக்காக தலா 3,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் பாதீட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் அதிகரிக்கப்படவுள்ளதுடன், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்குக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதுடன், காவல்துறை, சுங்கம் போன்றவற்றுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேநேரம், அரச பணியாளர்களுக்குப் பொருத்தமான வகையில் அடிப்படை வேதனத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
முதலீட்டாளர்களுக்குக் கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
அதேநேரம், மாங்குளம், பரந்தன் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அண்மையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தாம் முன்னெடுத்த விஜயங்களின்போது, விமான பயணச்சீட்டுக்கான செலவைத் தவிர வேறு எந்த செலவுகளுக்கும் அரச நிதியைப் பயன்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நாட்களின் அடிப்படையில் தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவையும் தாம் மீள அரசாங்கத்திடமே கையளித்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.