அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளை மீள நடாத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சையில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய குழுவினால் 4 அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்கள் இன்று யசந்த கோதாகொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றன. இந்தநிலையில், நேற்றைய தினம் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியினால் சமர்ப்பணங்கள் நிறைவுசெய்யப்பட்டன.
அதற்கமைய, இன்றைய தினம் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.