யாழ். மாவட்டத்தில் இதுவரை எலிக் காய்ச்சல் நோயினால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், மருதங்கேணி பிரிவில் 6 பெரும், சாவகச்சேரி பிரிவில் 4 பேருமாக இதுவரை 58 பேர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 7 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 6 இறப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.
எலிக்காய்ச்சல் நோய் உறுதிப்படுத் தப்பட்டுள்ளதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
முதலாவது, பொதுமக்கள் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில், கடந்த நாள்களில் ஏற்பட்ட இறப்புகள் மிகவும் தாமதமாக வைத்தியசாலைக்கு வந்த காரணத்தால் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பூரண குணமடைவதை அவதானிக்க முடிகின்றது. எனவே மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஒரு நாள் காய்ச்சல் வந்தாலும் அரசாங்க வைத்தியசாலைக்கு உடனடியாக செல்லுங்கள்.
இன்று முதல் நாங்கள் ஆபத்தை எதிர் நோக்கும் நோயாளர்களுக்கு ‘ ‘ரொக்ஸி சைக்கிளின்’ என்கின்ற தடுப்பு மாத்திரையை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். விவசாய திணைக்களத்துடன் இணைந்து, விவசாய அமைப்புக்களின் உதவியுடன் விவசாயிகளுக்கு இந்த தடுப்பு மருந்துகளை வழங்குகின்றோம் அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்கள் களவிஜயம் மேற்கொண்டு காச்சலுடன் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்பொழுது சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவிலிருந்து விசேட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று வருகை தந்திருந்தது. அவர்கள் நேற்று முன் தினம் யாழ்ப்பாணம் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது அவர்கள் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும், அதனைத் தொடர்ந்து கரவெட்டி மற்றும் சாவகச்சேரி சுகாதார
வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர்கள் குழு கொழும்பு தொற்றுநோய் தடுப்புபிரிவிலிருந்து வருகை தருகின்றனர்.
அவர்களும் இணைந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். எவ்வாறு இந்த பரவலை கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர் – என்றார்.