யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அதில் அரசு அதிகாரிகள் விசனம் தெரிவித்ததுடன் கட்டுப்படுத்தவேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தனர் என குற்றச்சாட்டுகளை
முன்வைத்தமையை அவதானிக்க முடிந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டது.
குறித்த கூட்டத்தில் இம்முறை பாராளுமன்றதுக்கு தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அதிகாரிகளை விழித்த வார்த்தைகள் சபை ஒழுங்குக்கும் கூட்டம் ஒழுங்குக் கும் முரணாக இருப்பதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டினார்.
நகர அபிவிருத்தி தொடர்பான விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, துறை சார்ந்த பெண் உயர் அதிகாரி ஒருவரை ‘அன்ரி’ உங்கள் முகம் வியர்க்கிறது உங்களுக்கு திட்டமிடல் என்றால் என்ன என்று தெரியுமா என கேட்டார்.
அதுமட்டுமல்லாது யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை ‘தங்கம்’ ,’முத்து’ என அடிக்கடி கூறியதுடன் அவரின் கல்வித் தகமை தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.
மாகாண அதிகாரி ஒருவரை படையப்பா படம் பார்த்தீர்களா? பத்து மில்லியனை 10 நாளில் எப்படி செலவளிப்பீர்கள் என தனக்கு கூறுமாறு அடிக்கடி குறுக்கீ செய்து கேள்விகளை தொடுத்தார்.
அது மட்டுமல்லாது யாழ். மாவட்டத்தில் திட்டங்களை வகுக்கும்போது உங்கள் கல்வி அறிவு போதாது என அதிகாரிகளை விமர்சித்ததுடன் அவ்வாறு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள் கற்றுத் தருகிறேன் எனக் கிண்டல் அடித்தார்.
இவ்வாறான நிலை ஏற்பட்டபோது அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.