திருமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம்!

Editor 1

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலைக்குத் தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நெருங்கி, இன்றைய தினம் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அதேநேரம், வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், இடைக்கிடையே காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடல் பகுதிகளில் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் வரை மேலெழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Share This Article