தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறியுள்ள அந்த திணைக்களம், நாட்டினுள்ளும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கும் ‘அபாய’ வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன் காரணமாகக் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வீசக்கூடும்.
அத்துடன், குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், கடலலைகள் உயர்வாகவும் காணப்படுவதுடன் குறித்த பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், நாளை முதல் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் ஏற்படவிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.