வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்துக்கு காரணமான பெண்
மருத்துவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 29.10.2024 அன்று வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் இராம்தாஸ் (வயது- 41) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீற்றர் தூரத்தில் காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியான பெண் மருத்துவரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.