”10ஆவது புதிய பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய அக்கிராசன உரையின்போது தமிழர்களின் இனப்பிரச்னைக்கான தீர்வு விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் 13ஆவது திருத்தம் அமுலாக்கல் குறித்து ஜனாதிபதி எதுவுமே தெரிவிக்காமை எமக்குப் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. எனவே இது குறித்து
இந்தியா அதிக கவனம் செலுத்தவேண்டும்.’ இவ்வாறு நேற்று இந்தியத் தூதுவர்
சந்தோஷ் ஜாவிடம் தெரியப்படுத்தியுள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பாராளுமன்றக் குழு. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் பாராளுமன்றக் குழுவுக்கும், இந்திய தூதுவருக்கும் இடையிலான இந்தச்சந்திப்பின்போது, நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்- அண்மைக்கால விடயங்கள் குறித்து இந்தியத் தூதுவருடன் விரிவாக பேச்சு நடத்தினோம். குறிப்பாக ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, 13ஆவது திருத்த அமுலாக்கம் என்பன குறித்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து இந்தியத் தூதுவருக்கு விளக்கியுள்ளோம். அத்துடன் சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் எடுத்துரைத்தோம் – என்றார்.