ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவசியமான பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட பிரசார கூட்டம் இன்று கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1978 ஆம் ஆண்டு முதல் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் இணைந்து பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
அவ்வாறே இன்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கமைய, பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமைகளை வழங்கி வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்தோம்.
இருப்பினும், அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாது போயுள்ளது. தற்போது ஜனாதிபதி அவசியமான பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.