ஏப்ரல் – 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் என்ற ரீதியில் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழுக்களின் வெளியிடப்படாத இரண்டு விசாரணை அறிக்கைகளில் உள்ள விடயங்களை நேற்று பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில்,
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைக்கப்பட்ட குழுக்களினூடாக அந்த அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
அந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர்.
எனவே, அரசியல் பழிவாங்கலுக்காக அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதால், அதனை தற்போதைய அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
ஷானி அபேசேகர ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயே, அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
ரவி செனவிரட்னவும் எந்த குற்றச்சாட்டுக்களிலும் தொடர்பு பட்டிருக்கவில்லை.
அரசியல் பழிவாங்கலுக்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையையே உதய கம்மன்பில வெளிப்படுத்தியுள்ளார்.
அவை வெளியிடப்படாத புதிய அறிக்கை இல்லை.
எனவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரட்ன ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், எமது அரசாங்கத்தில் பக்கச்சார்பின்றி, புதிய முழுமையான விசாரணை நடத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.