உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சனல் – 04 முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கை காணாமல்போயுள்ளது என கொழும்பு மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் கையளித்தது அவர் அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்தார் அவர்களிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையே காணாமல்போயுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி குறி;த்தும் பல முக்கியமான விடயங்கள் குறித்தும் விபரங்கள் இடம்பெற்றிருந்ததாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் அம்பலமானால் பல அரசியல்வாதிகளின் முகத்திரை கிழியும்,பல அரசியல்வாதிகள் சிறைசெல்லநேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை முன்னெடுத்த குழுவின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த அபுஹின்ட் என்பவரே இந்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சில விடயங்கள் தெரியும் என அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரண்டு குழுக்களை நியமித்தார்.
முதலாவது குழு இந்ததாக்குதலிற்கும் இராணுவபுலனாய்வாளர்களிற்கும் தொடர்புள்ளது என சனல் 4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டது.