தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, 244,228 பேர் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 452,979 பேர் தோற்றியிருந்தனர்.
குறித்த பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய, 75.72 சதவீதமான மாணவர்கள் உயர்தரத் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,309 ஆகப் பதிவாகியுள்ளது.
இது மொத்த பரீட்சார்த்திகளில் 4.13 சதவீதம் பதிவாகியுள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த முறை பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் தோல்வியைச் சந்தித்த மாணவர்களின் எண்ணிக்கை 2.12 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, நாடளாவிய ரீதியில் காலி சங்கமித்தா வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன், 2ஆம் இடத்தை கொழும்பு 7 மியூசியஸ் கல்லூரி மற்றும் குருணாகல் மலியதேவ வித்தியாலயம் ஆகிய பெற்றுள்ளன.
அதேநேரம், 3ஆவது இடத்தை கொழும்பு விசாகா கல்லூரி, நுகேகொடை அனுலா வித்தியாலயம் ஆகியன பெற்றுள்ளன.
இதேவேளை, கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.