அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தொிவித்துள்ளாா்.
அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னா் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டாா்.
இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும்.
கடவுச்சீட்டினை வழங்குவதே இந்த அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,
பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.
சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும்.
சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன். எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது.
அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள்.
இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்” என மேலும் தொிவித்தாா்.