ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாளை சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 4 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இதற்காக, 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாளை வரை அமைதி காலமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை, வாக்காளர்கள் விரும்பிய வேட் பாளரின் பெயர் மற்றும் அவரின் சின்னத்துக்கு
அருகில் புள்ளடியிட்டு தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இதேபோன்று விருப்பு வாக்குகளை செலுத்துவதாயின் 1, 2, 3 என்று இலக்கங்களை பயன்படுத்தியே வாக்களிக்க முடியும்.
புள்ளடியையும் இலக்கத்தையும் இட்டால் அது நிராகரிக்கப்பட்ட வாக்காகக் கருதப்படும். இதேபோன்று தபால் மூல வாக்களிப்புகளை எண்ணும் பணிகள் 4.15 மணியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவற்றை ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளைத் தொடர்ந்து இறுதி முடிவுகளுக்கு அமைய வேட்பாளர் ஒருவர் 50சதவீத வாக்குகளை பெற்றுள்ளாராயின் அத்துடன், வாக்கெண்ணும் பணிகள் நிறைவடையும்.
ஒரு வேட்பாளருக்கேனும் 50 வீத வாக்குகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை ஏற்படும். இது, முதலாம் இரண்டாம் விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தியே மேற்கொள்ளப்படும்.
அதன் இறுதியில் விருப்பு வாக்குகளும் இணைத்துக் கொள்ளப்பட்டமையை தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் – என்றார்.