கடவுச்சீட்டு விநியோகம் எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதியில் வழமைக்கு திரும்பும்!

கடவுச்சீட்டு விநியோகம் எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதியில் வழமைக்கு திரும்பும்!

editor 2

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதியில் வழமைக்கு திரும்பும். வழமையான விநியோகஸ்தர்களிடமிருந்து அவசரமாக வெற்றுக் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதாயின் 894 மில்லியன் ரூபாவை செலவிட நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் கடவுச்சீட்டு விநியோகத்தை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடவுச்சீட்டு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசியல்வாதிகள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். பிரச்சினைகள் ஏதும் கிடையாது. கடந்த 23 ஆண்டுகளாக எவ்விதமான விலைமனுக்கோரலுமில்லாமல் ஒரு வெற்றுக் கடவுச்சீட்டு 5.99 டொலருக்கு குறித்த ஒரு தரப்பினரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

இலத்திரனியல் முறைமையிலான கடவுச்சீட்டு அமுல்படுத்துவதற்கான யோசனை பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னிலையான தரப்பினரிடமிருந்து உலகளாவிய ரீதியில் விலைமனுக்கோரல் ஊடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வரை கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவசரமாக பழைய முறைமையின் கீழ் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 896 மில்லியன் ரூபாவை செலவிட நேரிடும்.

கடவுச்சீட்டு விண்ணப்பிப்பதற்காக திணைக்களத்துக்கு வந்து வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக நிகழ்நிலை முறைமை ஊடாக திகதி மற்றும்  நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தினோம். ஒரு தரப்பினர் 100 சிம் அட்டைகளை பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து அவற்றை பொது மக்களுக்கு 45 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யும் மோசடிகள் இடம்;பெற்றன. இதனை தடுப்பதற்காகவே நிகழ்நிலை முறைமை ஊடான வசதியை இரத்து செய்தோம்.

 கடவுச்சீட்டுக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி பொலிஸாருக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் அவசியமற்ற வகையில் சுற்றி திரிபவர்கள் கைது செய்யப்படுவார்கள். திணைக்களத்தின் வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகம் என்பதை காண்பிப்பதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள் என்றார்.

Share This Article