சஜித்துக்கு ஆதரவு – தனக்கு தெரியாது என்கிறார் மாவை!
சஜித் பிரேமதாஸவுக்கு என்ன அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்பது கட்சியின் தலைவருக்கு தெரிவிக்கப்படவில்லை – அது குறித்து தலைவருக்கு
தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் – இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு வவுனியாவில் நேற்றுக் கூடிவரும்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவிப்பதென அறிவித்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா
பங்கேற்றிருக்கவில்லை. இந்த நிலையில், செய்தியாளர்கள் அவரை தொடர்பு
கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் அரசுக் கட்சியாக தீர்மானம் எடுத்தாலும் அது எந்த அடிப்படையில்
எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருக்க
வேண்டும் – என்றும் சொன்னார்.
இதேவேளை, ‘தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம்
என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.
மாவை சேனாதிராசாவுக்கும் அறிவித்து அவரும் வருவதாக இருந்தார். உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.
மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது. மத்திய
குழுவின் தீர்மானம்தான் சஜித் பிரேமதாஸவுக்கு அதரவு வழங்குவது என்பது.
அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு.
அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன் – என்று கட்சியின் பதில் பொதுச்
செயலாளர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.