தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன காமினி லொகுகே உட்பட பலர் குறித்து ஆராய்ந்தோம் எனதெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தம்மிக பெரேரா போட்டியிலிருந்து விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம்.
பிரதமர் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினர் காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.
கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல்ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம். நாமல் அதற்கு இணங்கினார்.
எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர் விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம், அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் பொதுஜனபெரமுனவின் உறுப்பினரே.என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சியின் முடிவை நிராகரித்து ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாவட்ட மட்ட பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அவ்வாறான முடிவை எடுத்தால் நீதிமன்றம் அதற்கு ஆதரவளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு நாங்கள் தேர்தல் குறித்து கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சியின் நலனிற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து நீண்டநாட்களாக எங்களிற்கு தெரியும் மேலும் இருவர் உள்ளனர், அவர்கள் என்ன செய்ய திட்டமிடுகின்றனர் என்பதும் எங்களிற்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.