ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக புதிய அரசாங்கம் அமைக்கப்படும். இதற்காக தற்போதைய பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கொழும்பு அரசியல் உயர்வட்டாரங்கள் மூலம் அறிய வருகின்றது ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதானால் பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று
நேற்றைய தினம் மகிந்தராஜபக்ஷவின் இல்லத்தில் நடந்த சந்திப்பில் பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷ முக்கிய நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த நிபந்தனையை அடுத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் முடிவை எடுத்தார் என்று கூறப்படுகின்றது.
இதேசமயம், தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம் தனக்குச் சாதகமான நிலைமையையும் எதிர்க்கட்சிக்கு பலவீனமான நிலைமையையும் ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கருதுகிறார். எனவே, தனக்குள்ள தற்துணிவு அதிகாரத்துக்கு அமைய தற்போதைய பாராளுமன்றத்தைக் கலைத்து முதலில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறார்.
அரசமைப்பு விதிகளின்படி தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது.
இதுபோல,
புதிய பாராளுமன்றம் எந்த நாளில் கூடவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உரியதே. எனவே, விரைவாக பாராளுமன்றத்தை
கலைத்து, பொதுத் தேர்தலை நடத்தி, புதிய பாராளுமன்றம்கூடிய கையுடன்
ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே, நாட்டின் சட்டத்தின் படி, எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது. விரைவில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் நிலைமை உள்ளது.
தேர்தல் சட்டவிதிகளின்படி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 28 முதல் 42 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும். எனவே, நவம்பர் 18ஆம் திகதி புதிய ஜனாதிபதி பொறுப்பேற்கும் விதமாக – பாராளுமன்றத்தை கலைத்து – புதிய பாராளுமன்றம் அமைந்த கையுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்ட மிட்டுள்ளார் என்றும் கொழும்பு அரசியல் உயர்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.