ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார் – எஸ்.பி.திஸாநாயக்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார் - எஸ்.பி.திஸாநாயக்க!

Editor 1

2022ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய மாட்டார்.

நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் போது நாடு வங்குரோத்து நிலையடையவில்லை என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்று சவால்களை வெற்றி கொண்டுள்ளார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான பொருளாதார தாக்கத்தை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தனர். ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போதைப்பொருள் பாவனையாளர்கள் கூடாரமிட்டு தேசிய பாதுகாப்பையும் சட்டவாட்சியையும் கேள்விக்குள்ளாக்கினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வராமலிருந்திருந்தால் நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும். போராட்டக்காரர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு பயங்கரவாதிகளை போன்று செயற்பட்டவர்களை அடக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் வியாபாரிகளை கண்டு அச்சமடைய போவதில்லை.

ஜனாதிபதியின் சிறந்த திட்டங்களினால் குறுகிய காலத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது.தற்போதைய முன்னேற்றங்களை தொடர வேண்டுமாயின் நாட்டின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்றார்.

Share This Article