நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு களுத்துறையில் நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவாளர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலமிக்க கட்சியாக தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறந்த வழிகாட்டியாக செயற்படுகின்றார்.
அதேபோல் தற்போது நடப்பு அரசாங்கத்திலும் எமது கட்சியின் பாரிய பங்கு உள்ளது. நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுக்கும் ஜனாதிபதியின் முயற்சிக்கு நாம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கிவந்தோம்.
நாம் கடனாளியாகவோ அல்லது அச்சத்தினாலோ ஒத்துழைப்பு வழங்கவில்லை. நாடு தொடர்பிலும் நாட்டு மக்கள் தொடர்பிலும் சிந்தித்தே நாம் ஒத்துழைப்பு வழங்கினோம்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய போது நாட்டின் ஜனாதிபதி நாட்டை விட்டுவெளியேறிய போது இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த தலைவர் ரணில்விக்ரமசிங்க என்பதனாலேயே ஆளுந்தரப்பாக நாம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம்.
அதேபோல் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம் என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.
நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கின்றேன் என பசில் ராஜபக்ஷ மேலும் தொிவித்தாா்.