நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இக்கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்த்து எதிர்வரும் 2ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலைகளுக்கு எதிரில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் இதில் பெற்றோர் இணைந்துகொள்வார்கள் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது போக்குவரத்துச் சேவை மற்றும் பொருட்களுக்கான போக்குவரத்து சேவைஆகியவற்றை அத்தியாவசியச் சேவையாக அறிவித்து, ஜனாதிபதி ரணில் விக்கிமங்க வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
தேவையேற்படின் கல்வியையும் அத்தியாவசிய சேவையாக மாற்றுவேன் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சேவைகளிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதனை, வலுக்கட்டாயமாக அத்தியாவசிய சேவைகளை மாற்றுவதற்கு அவர் முயற்சிக்கின்றார்.
இது அவருக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கும். இவ்வாறு வர்த்தமானி வெளியிடுவதும், கல்வியையும் அத்தியாவசிய தேவையாக அறிவிப்பேன் என குறிப்பிடுவதும், மக்களுக்கான தேவையல்ல. தன்னால் பிரச்சினைகளுக்கானத் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் எமது போராட்டங்களை முடக்க முயற்சிக்கின்றார்.
அவர் சரியான ஜனாதிபதியானால் பேச்சுவார்தை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். அவ்வாறின்றி, அச்சுறுத்தல் விடுவதும், எச்சரிக்கை விடுப்பதும், சட்டத்தை பயன்படுத்தி வர்த்தமானி வெளியிடுவதும் நகைச்சுவைக்குரிய விடயமாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.