இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பிரான்ஸில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் மாநாட்டின் ஓரங்கமாக இடம்பெற்ற நிகழ்வில் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் இடையில் இருதரப்பு கடன் மறுசீரமைப்பில் உடன்பாடொன்று எட்டப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவில் உள்ள பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அத்துடன் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது இந்த செயல்பாட்டில் தலைமை தாங்கியதற்கு இலங்கை சார்பாக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு காணவும், பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவின் செயலாளரரையும் அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் தலைமைத்துவமும் எமது நாடு இந்த மைல்கல்லை நோக்கி இட்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.