சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுக் கலந்துரையாடலின் போது, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும். எனவே இந்தப் பணியை நிறைவுசெய்வது தொடர்பாக தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த 9ஆவது மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
இந்த மாநாடு பொரலஸ்கமுவ கோல்டன் ரோஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றிருந்தது.
கடந்த காலத்தில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது, நாட்டை விட்டு தப்பித்து ஓடாமல் அதனை
எதிர்கொண்டு நாட்டுக்காக தமது பொறுப்புகளை நிறைவேற்றிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஜனாதிபதி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கி வைத்தார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.