எமது ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு, மேல் என்று 9 மாகாணங்களின் மக்களுக்கும் இந்த வாக்குறுதியை நான் வழங்குகிறேன். 13ஐ நடைமுறைப்படுத்த நான் தயங்கப் போவதில்லை – என்று நேற்று கிளிநொச்சியில் வைத்து உறுதியளித்தார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ.
நேற்று கிளிநொச்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் 225ஆவது கட்டமாக 11
இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை
உபகரணங்களை பாரதி வித்தியாலயத்துக்கு வழங்கி வைத்தார்.
அத்துடன், பாடசாலை அபிவிருத்திக்காகவும் ஒரு இலட் சம் ரூபாயை வழங்கி வைத்திருந்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் – வெவ்வேறு
வழிகளில் – வெவ்வேறு பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே கூறிவருகின்றது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதி
மொழி வழங்கப்பட்டது. அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டின் வடக்கு, கிழக்கு, மேல் என 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன்.
இதனை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை.
இதன் மூலம் இந்தப் பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் வழங்கப்படும். நாட்டின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும்.
நாட்டில் முதல் தர, இரண்டாந் தர, மூன்றாந் தர குடிமக்கள் என்ற வகைப்பாடுகள் எவையும் இல்லை. எல்லோரும் சமமானவர்களே. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள் உட்பட 220 இலட்சம் குடிமக்களும் முதல் தர குடிகளே. இதற்கான ஏற்பாடுகள் இல்லாததால், நிர்வாகத் துறையில் சட்டம் ஒழுங்கு துறையில் ஏற்பாடு களை மேற்கொண்டு யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவோம்.
13 ஆவது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள், மேலே
பார்த்துக் கொண்டு இருத்தல் – கேட்காதது போல் நடந்து கொள்ளுதல் – பிற தலைப்புகளைக் கொண்டு வருதல் – பயப்படுதல் – வெட்கப்படுதல் போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகளாக நடந்து கொள்கின்றனர். நான் நேரடியாக பேசும்
நபர் என்பதால்,13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன்.
சிங்களவர்களாக இருந்தாலும் – தமிழர்களாக – முஸ்லிம்களாக – பறங்கியர்களாக இருந்தாலும் ஒன்றாய் கைகோத்து, ஒரு தாயின் பிள்ளைகள் போல் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுங்கள் – என்றார்.