முல்லைத்தீவு வலயத் திணைக்கள கணக்காளர் மீது அவதூறு! நடந்தது என்ன? 

முல்லைத்தீவு வலயத் திணைக்கள கணக்காளர் மீது அவதூறு! நடந்தது என்ன? 

Editor 1

முல்லைத்தீவு கல்வி வலயத் திணைக்களத்தின் கணக்காளர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ள செய்தி, இனக் குரோத நடவடிக்கைகளைத் தூண்டுவதற்காக வெலி ஓயாவில் பரப்பப்பட்டுவருகின்றமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டம் முல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சம்பத் நுவர சிங்கள மகா வித்தியாலயம் மணலாறு (வெலி ஓயா) பகுதியில் காணப்படுகிறது.

முல்லைத்தீவு வலயப் பாடசாலைகளில் இணைய சேவையை இலகு படுத்தும் நோக்கில் வகுப்பறைகளுக்கு இடையிலான இணையத்தள வலையமைப்பு (Internal Network) பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு (2023) குறித்த பாடசாலையும் தாமும் தமது பாடசாலையில் இணையத்தள வலையமைப்பினை மேற்கொள்ள நிதி ஒதுக்குமாறு வலயத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அதற்கென 450,000.00 நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும்,

ஆண்டு இறுதி 31ஆம் திகதி வரையில் அந்தப் பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களை பாடசாலைச் சமூகம் மேற்கொள்ளவில்லை என்பதால் இலங்கையின் திறைசேரியின் நடைமுறைக்கு அமைய குறித்த பணம், கல்வித் திணைக்களத்தினால் திறைசேரிக்கு மீளச் செலுத்தப்பட்டிருகின்றது.

இதனைத் தொடர்ந்து,

குறித்த பணம் கணக்காளரால் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்கள் சில உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பகிர்ந்துள்ளன.

குறித்த செய்திகளை  இனவாத சமூகவலைத்தளங்களிலும் ஏனைய வகைகளிலும் இனக் குரோத நடவடிக்கைகளுக்காக வெலி ஓயாவில் உள்ள அரசியல்வாதி ஒருவர் பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என்றும் இது தொடர்பில் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தேவைப்பட்டால் மாகாண கல்வி அமைச்சினை அணுகுமாறும் முல்லைத்தீவு கல்வி வலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article