திருகோணமலை – சம்பூர் பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கியமைக்காக கைதான நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான பெண்கள் மூவரும், ஆண் ஒருவரும் இன்றைய தினம் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 11ஆம் திகதி முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயரில் கஞ்சி தயாரிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதைய நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனிடையே சம்பூர் பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் ஒன்றுகூடுதல், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் அல்லது தொற்றுநோய் ஏற்படும் வகையில் உணவு பரிமாறல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மூதூர் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்றத்தின் இந்த கட்டளைக்கு புறம்பாக செயற்பட்ட குற்றச்சாட்டிலும், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலும் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.