மட்டக்களப்பு நகரில் ஆலயங்களின் கதவுகளை உடைத்து மின்பிறப்பாக்கியில் உள்ள செம்புக்கம்பிகளையும் குத்துவிளக்குகளையும் திருடிவந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாருக்கு கொடுத்த தகவலுக்கமைய, மேலும் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்த திருட்டுக் குற்றத்தில் கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று சனிக்கிழமை (4) உத்தரவிட்டார்.
கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியிலுள்ள மின்சார சபைக்கு சொந்தமான மின்பிறப்பாக்கிகளில் பொருத்தப்பட்டிருந்த செம்புக் கம்பிகள் கடந்த 2022-23 ஆண்டுகளில் திருடப்பட்டு வந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (2) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் ஆலயங்களில் குத்துவிளக்குகள், மின் பிறப்பாக்கிகளில் உள்ள செம்புக் கம்பிகளை திருடியது தொடர்பாக 26 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
செப்பு திருட்டு கும்பலைச் சேர்ந்த திராய்மடு பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேருடன் இணைந்தே இருவரும் மின்பிறப்பாக்கிகளின் செப்புக் கம்பிகளையும் குத்துவிளக்குகளையும் திருடியமை விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, திருடப்பட்ட மின்பிறப்பாக்கிகளிலுள்ள செப்புக் கம்பிகள், ஆலயங்களிலுள்ள செம்புப் பாத்திரங்கள், குத்துவிளக்குகளை விற்றுவிட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த இருவரும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் செம்பு திருட்டுக் குழுவைச் சேர்ந்த மேலும் 4 பேரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
அவ்வேளை, திராய்மடுவைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்ததுடன், திருடப்பட்ட செப்புக் கம்பிகளை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பழைய இரும்பு விற்பனை கடையொன்றில் உருக்கிய நிலையில் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு, நால்வரில் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.